சென்னை: தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தமிழறிஞர்கள் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழறிஞர்கள் மற்றும் படைப்பாளர்களை பாராட்டி தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்சம் பரிசு மற்றும் ஒரு பவுன் தங்க பதக்கம்), வீரமாமுனிவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு மற்றும் ஒரு பவுன் தங்கப்பதக்கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50 ஆயிரம்பரிசு மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கம்), நற்றமிழ் பாவலர் விருது(ரூ.50 ஆயிரம் பரிசு மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம்), தூயதமிழ் பற்றாளர் விருது (ரூ.20 ஆயிரம் பரிசு) ஆகிய விருதுகளுக்கும், தூய தமிழ் பற்றாளர் பரிசுக்கும் (ரூ.5 ஆயிரம் பரிசு) தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்ப படிவத்தை http://sorkuvai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இயக்குநர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், நகர நிர்வாக அலுவலக கட்டிடம் (முதல் தளம்), 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்ஆர்சி நகர், சென்னை 600 023 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல்வழியாகவோ அல்லது http://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய 044- 29520509 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.