குன்னூர்: மேட்டுப்பாளையம் – உதகைமலை ரயில் சேவை வரும் 6ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கல்லார்-மலைக்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் – உதகை இடையே புறப்பட வேண்டிய ரயிலும், மதியம் 2 மணிக்கு உதகை – மேட்டுப்பாளையம் இடையே புறப்பட வேண்டிய ரயிலும் ரத்து செய்யப்பட்டன. மேலும், தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில், ரயில்வே ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் நிலச்சரிவை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் சேவை வரும் 6ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உட்கைக்கு இன்றும், 4ம் தேதியும் இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 3 மற்றும் 5ம் தேதிகளில் இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மலை ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் குன்னூர் – உதகை இடையே மலை ரயில் சேவை வழக்கம் போல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.