சென்னை: திமுக ஆதரவுடன் குதிரை பேரம் நடத்தி ஆட்சியமைக்க முயற்சி செய்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ஒவ்வொருவரும் பதவியை ராஜினாமா செய்வது அவரவருடைய ஜனநாயக உரிமை. முதலமைச்சர் விஜய் ஜனநாயகத்தை பாதுகாப்பார். திமுக ஆதரவுடன் குதிரை பேரம் நடத்தி ஆட்சியமைக்க முயற்சி செய்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
திமுக ஆதரவுடன் முதலமைச்சர் ஆவேன் என்று சொன்னது யார். தவெக எவ்வித குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது என்ற கேள்விக்கு, இதற்கு முன்னால் எதிர்க்கட்சிகள் என்ன சொன்னார்கள்? ஆறு மாத காலத்திற்கு எந்த கருத்தும் சொல்லப் போவதில்லை என்று சொன்னார்கள்.
பொறுமையாக இருந்தால் ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்குரிய அவகாசம் தர வேண்டும். இது போன்ற குற்றங்கள் நடக்கும்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீண்டும் அதன் நடவடிக்கை என்ன என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் அழைத்து வந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பதாக உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், நான் யாரையும் போய் பார்க்கவில்லை, சேர்க்கவும் இல்லை. நான் வெளிவந்த பிறகு அதிமுக சரிந்துள்ளது. அதனால் அவர் வேதனைப்படுகிறார். அதிமுக என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் தொண்டர்கள் தான். அவர்கள் படத்தை எடுத்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி படம் வைக்க சொன்னால் அது எப்படி ஜனநாயகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.