கர்நாடகா: கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமாரின் புதிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பி.ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கர்நாடக முதல்வராக சித்தராமையா இருந்து வந்தார்.
இதைத் தொடர்ந்து கட்சி மேலிடத்தின் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் படி, காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டது.
இதையடுத்து சித்தராமையா மே 28 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். துணை முதலமைச்சராக இருந்த சிவக்குமார், மே 30 அன்று கர்நாடக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகத்தின் 25வது முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை முதல்வர் பரமேஸ்வரா உட்பட 12 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் புதிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் அழகப்பம்பட்டியை சேர்ந்தவர் பி.ராஜேந்திர சோழன். 2008-ஆம் ஆண்டு கர்நாடகா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். மேலும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 31-வது ரேங்க் பெற்றார்.
டி.கே.சிவகுமார் கர்நாடகாவின் துணை முதலமைச்சராக இருந்தபோதும், ராஜேந்திர சோழன் அவரிடம் செயலாளராகப் பணிபுரிந்துள்ளார். முதல்வர் அலுவலகச் செயலாளர் பொறுப்புடன், கூடுதலாக கர்நாடக மின் கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளார்.