சென்னை: ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரூ.58 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில், நீக்கப்பட்ட நடிகை அபிராமியின் சண்டைக் காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கேஜிஎப் புகழ் ரவி பசூர் இசையமைத்துள்ளார்.
அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அதிரடி மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதன் காரணமாக பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், படம் ரூ.58 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகை அபிராமியின் பேருந்து சண்டைக் காட்சியும் தற்போது வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.