கும்பகோணம்: கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெல் சேமிப்பு மையங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் ர.வினோத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத், கும்பகோணம் பட்டீஸ்வரம் திறந்தவெளி சேமிப்பு மையம், கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் சோழன் மாளிகை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பட்டீஸ்வரம் சேமிப்பு மையத்தில் தற்போது 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இருப்பில் உள்ளதாகவும், கூடுதல் சேமிப்புக்காக கிருஷ்ணாபுரத்தில் புதிய திறந்தவெளி சேமிப்பு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மழைக்காலத்தை முன்னிட்டு நெல் பாதுகாப்பு, தார்பாய் இருப்பு, சணல் சாக்குகள் மற்றும் கொள்முதல் பணிகளில் எவ்வித தடையும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.