சென்னை: திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் நயன்தாராவை முந்தி ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரை உலகில் சம்பள விஷயத்தில் நடிகைகளிடையே முதலிடத்தை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னணி நடிகைகளின் சம்பளமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீண்ட காலமாக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வந்தார். ஒரு படத்திற்கு ரூ.9 கோடி முதல் ரூ.12 கோடி வரை அவர் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டில் ராஷ்மிகா மந்தனா அந்த சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நடித்துள்ள ‘காக்டெயில்-2’ திரைப்படத்திற்காக ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‘அனிமல்’, ‘புஷ்பா-2’, ‘சாவா’ உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனை படைத்துள்ளன. ‘புஷ்பா’ முதல் பாகத்தில் ரூ.2 கோடி சம்பளம் பெற்ற ராஷ்மிகா, சில ஆண்டுகளிலேயே ரூ.15 கோடி சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.