சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், மாநில ஜல்சக்தி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சொந்தமாக குடிநீர் வசதி உள்ள, ஜல்சக்தி துறை சாக்கடை வசதிகளை பயன்படுத்தும் அனைத்து குடும்பங்களுக்கும், அக்., 1-ம் தேதி முதல், கழிப்பறைக்கு, 25 ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது.
இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ‘எக்ஸ்’ பதிவில், “நம்பமுடியாது, ஆனால் உண்மை. பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியாவை மக்கள் இயக்கமாக மாற்றி வரும் நிலையில், காங்கிரஸ் அரசு கழிவறைக்கு வரி விதிப்பது வெட்கக்கேடானது.
அவர்களின் ஆட்சியில் நல்ல மருத்துவ வசதிகளை வழங்க முடியவில்லை. அவர்களின் இந்த செயல் நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தும்.
பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், ”சுக்விந்தர் சிங் சுகு அரசின் அறிவும், விவேகமும் மோசமாகி விட்டதையே இது காட்டுகிறது. அப்படிப்பட்ட அரசுக்கு தொடர்ந்து ஆட்சியில் இருக்க உரிமை இல்லை,” என்றார்.
இதையடுத்து கழிவறை வரி உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், “முந்தைய பா.ஜ.க., அரசு, இலவச குடிநீர் உட்பட, 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை அறிமுகப்படுத்தியது.
ஆனால், 2022 சட்டசபை தேர்தலில், அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கும் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. தற்போதைய காங்கிரஸ் அரசு, குறைந்தபட்ச கட்டணத்தை விதித்து, மானியத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.