லக்னோவில் உள்ள 10 சொகுசு விடுதிகளுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் உள்ள நான்கு ஹோட்டல்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து இது நடந்துள்ளது. அந்த சம்பவத்தில், போலீசார் நடத்திய விசாரணையில் அது வதந்தி என தெரியவந்தது.
இந்நிலையில், லக்னோவில் உள்ள மேரியட், பார்டூன், லெமன் ட்ரீ உள்ளிட்ட ஓட்டல்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மின்னஞ்சலை அனுப்பிய நபர், “உங்கள் ஓட்டல் வளாகத்தில் கருப்புப் பையில் வெடிபொருட்களை மறைத்து வைத்துள்ளேன். ரூ.46.24 லட்சம் கொடுக்காவிட்டால் வெடிக்கச் செய்வேன்” என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டல் நிர்வாகிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினருடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் சமூகத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் பலர், பாதுகாப்பு நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.