கோவா: கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் இன்று இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கவுதம் மேனனின் கேள்விகளுக்கு மணிரத்னம் பதிலளித்தார். சினிமா குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட மணிரத்னம், “எனது முதல் படத்தை இயக்கியபோது, எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு மாஸ்டர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனா, ஒவ்வொரு முறையும் எப்படி படம் பண்ணப் போறோம்னு தெரியாம, முதல் படம் மாதிரி ஃபீல் பண்ணிட்டுத்தான் ஷூட்டிங் போறேன்.
சினிமா என்பது உங்களுக்குள் எதையாவது பகிர்ந்து கொள்வது என்று நினைக்கிறேன்,” என்றார். ‘பொன்னியின் செல்வன்’ படம் பற்றி அவர் பேசுகையில், “கிளாசிக் என்று சொல்வதை எல்லாம் படமாக எடுக்க வேண்டும். இந்தப் படத்தை எப்படி எடுக்கப் போகிறோம் என்று பயமாக இருந்தது. இந்தக் கதையை லட்சக்கணக்கானோர் படித்திருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றும் கதாபாத்திரங்களின் தனித்துவமான படத்தைக் கொண்டுள்ளன. கதையை படமாக்குவது மட்டும் எனக்கு சவாலாக இருக்கவில்லை; பார்வையாளர்களின் கற்பனையை திருப்திப்படுத்துவதும் சவாலாக இருந்தது.
அந்த வகையில் நானும் ஒரு வாசகன் என்பதால் எனக்கு தோன்றியதை திரையில் வெளிக்கொண்டு வந்தேன்” என்றார். “ஒரு இலக்கியப் படைப்பை ஈர்க்கும் படமாக மாற்றுவது எப்படி” என்ற கௌதம் மானின் கேள்விக்கு, “ஒரு மிகப் பெரிய காவியத்தை திரைக்குக் கொண்டுவருவது எனக்குப் பெரிய சவாலாக இருந்தது.
எனவே இதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன் அது ஈர்க்கும் என்பதை நீங்கள் உணரலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலையைப் பற்றி நீங்கள் எடுக்கும் இறுதி முடிவு உங்களுடையது. தொடர்ந்து பேசிய அவர், “பொன்னியின் செல்வன் காவியத்தை உருவாக்கிய எழுத்தாளர் கல்கி அதை முழுக்க முழுக்க பார்வையாளர்களின் கற்பனைக்கே விட்டுவிட்டார்.
உதாரணத்திற்கு, நந்தினி கதாபாத்திரம் கொலைகாரனா இல்லையா என்பது போன்ற பல விடை தெரியாத கேள்விகள் இதில் உள்ளன. ஆனால் இதை படமாக்கும்போது அந்த கற்பனைக்கு வடிவம் கொடுக்க வேண்டும்” என்றார்.