கர்நாடகாவின் பெங்களூரு நகரைச் சுற்றி கட்டமைக்கப்படும் சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) திட்டம், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஒரு முக்கியமான முயற்சியாக திகழ்கிறது. தேசிய நெடுஞ்சாலை 948A மற்றும் 648 ஆகியவற்றை இணைக்கும் இந்த 280 கிலோமீட்டர் நீளமுள்ள 8 வழிச் சாலை, தேவனஹள்ளி முதல் ஓசூர் வரை தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்களுக்கு புதிய உயிரூட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனுடன், இருபுறங்களிலும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்படுவதால் நகரத்திற்கும் வெளியேறும் வாகனங்களுக்கும் சுலபமான அணுகல் கிடைக்கும்.

தேவனஹள்ளி – ஓசூர் நெடுஞ்சாலையில் 17,000 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தப் பணிகளில், பன்னர்கட்டா தேசிய பூங்கா பாதிக்கப்படாத வகையில் 8.1 கிலோமீட்டர் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகின்றது. ஏற்கனவே தொப்பாஸ்பேட் – ஓஸ்கோடே இடையிலான 80 கிலோமீட்டர் பகுதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இத்திட்டம் நிறைவு பெற்றவுடன் பெங்களூரு – மங்களூரு எக்ஸ்பிரஸ்வே உடன் இணைக்கப்படும்.
இந்த நெடுஞ்சாலையில் மிக முக்கியமான அம்சமாக சரக்கு லாரிகளுக்கான பிரத்யேக வழித்தடம் உருவாக்கப்படுகிறது. தேவனஹள்ளி, ஓஸ்கோடே, லக்கூர், மாலூர், ஓசூர் போன்ற தொழில் நகரங்கள் வழியாக செல்லும் இந்த பாதை, பொருட்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் நகர்த்த உதவும். இதனால் தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்கள், மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு போக்குவரத்து தாமதம் குறையும். பயண நேரம் குறைந்து எரிபொருள் செலவும் குறையும் என்பதால், இது வர்த்தக ரீதியாக பெரிதும் பயனளிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த நெடுஞ்சாலை முழுமையாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வழித்தடம் திறக்கப்பட்டவுடன், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து இரண்டும் சீராக நடைபெறும். இடைப்பட்ட பகுதிகளில் லாரிகள் ஓய்வெடுக்க மற்றும் பராமரிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த STRR திட்டம், பெங்களூரு மற்றும் ஓசூர் இடையிலான பொருளாதார வளர்ச்சிக்கான புதிய அத்தியாயமாக மாறும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.