சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேராவூரணி அசோகுமார் (தி.மு.க.) எழுப்பிய கேள்விகளுக்கு நலத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்து பேசியதாவது:-
23 ஆண்டுகளுக்கு முன்பு புராதனவனேஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டது. தற்போது பணிகள் மேற்கொள்ள ரூ.83 லட்சத்துக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் பணிகள் தொடங்கப்படும்.
பாண்டிய மன்னனுக்கு சிவபெருமான் காட்சியளித்து, பேராவூரணி தொகுதியில் உள்ள புராதவனேஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோயில், “காசியை விட திருச்சிற்றம்பலம் சிவ வழிபாட்டுக்கு பலன் தரும்” என கூறியதாக வரலாறு உள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு ரூ.83 லட்சம் வழங்கிய அரசுக்கு நன்றி. திருமண மண்டபங்களை பொறுத்த வரையில், திருமணத்திற்கு உகந்த இடங்களில், இந்த அரசு பொறுப்பேற்ற பின், 97 திருமண மண்டபங்கள் ரூ. 350 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உறுப்பினர் கோரிய திருமண மண்டபத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கதலிவனேஸ்வரர் கோவில், வீரமாகாளியம்மன் கோவில், சென்னியம்மன் கோவில், குறிச்சி சிவன் கோவில், பால சுப்பிரமணியர் கோவில் என உறுப்பினர்கள் கோரிய 5 கோவில்களிலும் திருப்பணிகள் நடக்கும்.
குடமுழுக்கு, திருமண மண்டபங்கள் போன்ற பணிகள் விரைந்து முடிக்கப்படும். தமிழகத்தில் செப்டம்பர் இறுதிக்குள் 1,900 கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.