டாணாக்காரன் திரைப்படம் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ், தற்போது மார்ஷல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக இணைந்துள்ளார். பல மாதங்களாகவே இப்படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆரம்பத்தில் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வந்திருந்தாலும், கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகிய நிலையில், தற்போது நடிகர் ஆதி வில்லனாக நடிக்கவுள்ளதாக உறுதியாகியுள்ளது.

மிருகம், ஈரம் போன்ற படங்கள் மூலம் ஹீரோவாக வலம் வந்த ஆதி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இப்போது கார்த்தியின் எதிரியாக மார்ஷல் படத்தில் நடிக்கப் போகிறார். வில்லனுக்கேற்ற மிடுக்கான தோற்றம் கொண்ட ஆதி, இப்படத்தில் சக்திவாய்ந்த எதிரியாக ஜொலிப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மார்ஷல் படம் ஒரு பீரியட் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. 1960களின் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம், ராமேஸ்வரத்தை மையமாகக் கொண்ட கதை என தெரிவிக்கப்படுகிறது. அதற்காக அங்கு பெரிய செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் நிலையில், சத்யராஜ், பிரபு, லால் போன்ற மூத்த நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க, தயாரிப்பாளராக எஸ்.ஆர். பிரபு பணியாற்றுகிறார். டாணாக்காரன் படத்தால் ரசிகர்களை கவர்ந்த தமிழ், இந்த முறை மார்ஷல் மூலம் மேலும் பெரிய வெற்றியைத் தருவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டில் திரைக்கு வர இருக்கிறது.