சென்னை: சதுரங்க வேட்டை படத்தின் பின் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த நட்டி நட்ராஜ், மீண்டும் அதே மாதிரியான அல்டிமேட் கதையுடன் காமெடியில் ரகளை செய்யும் கம்பி கட்ன கதை படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு தில்லாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மங்காத்தா மூவிஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு தீபாவளிக்கான போட்டி ஏற்கனவே பரபரப்பாகி விட்டது. ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த வருடம் தீபாவளிக்கு வராத நிலையில், இளம் தலைமுறை ஹீரோக்களின் படங்கள் மோதலுக்கு தயாராகி இருக்கின்றன. ஹரிஷ் கல்யாணின் டீசல், துருவ் விக்ரமின் பைசன், பிரதீப் ரங்கநாதனின் டூட், லவ் இன்சூரன்ஸ் கம்பேனி, மேலும் சமுத்திரகனி, கவுதம் மேனன் நடித்துள்ள கார்மேனி செல்வம் உள்ளிட்ட பல படங்கள் ஏற்கனவே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இப்போது அதில் கம்பி கட்ன கதையும் இணைந்துள்ளது.
வரும் அக்டோபர் 17ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கம்பி கட்ன கதை வெளியிடப்பட உள்ளது. மங்காத்தா மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை உத்தரா நிறுவனம் வெளியிடுகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சாமியார் வேடத்தில் நட்டி நட்ராஜ் நடித்திருப்பது பார்வையாளர்களுக்கு சிரிப்பைத் தரும் வகையிலும், கதையில் நிச்சயமாக ரகளையான சம்பவங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீபாவளி ரேஸில் பல படங்கள் போட்டியிடும் நிலையில், நட்டி நட்ராஜின் கம்பி கட்ன கதை ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சினிமா வட்டாரங்களின் கூற்றுப்படி, இந்த படம் நகைச்சுவையுடன் கூடிய ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவத்தை வழங்கும் என நம்பப்படுகிறது. தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ரசிகர்களுக்குள் ஆர்வத்தை தூண்டியுள்ளது.