சமீபத்தில் நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை தொடங்க இருப்பதாக யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பல செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது நம்பத்தகுந்த திரையுலக வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி, இந்தக் கூட்டணி இப்போதைக்கு உருவாகும் வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.
சிம்பு ஏற்கனவே தனது பிறந்தநாளன்று மூன்று புதிய படங்களை அறிவித்து விட்டார். அதற்குமுன்னதாகவே அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதால், தற்போது இந்த நான்கு படங்களுக்கே முன்னுரிமை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நான்கு படங்களுக்குப் பிறகு தான் சிம்பு தனது அடுத்த படங்களைப் பற்றிய முடிவுகளை எடுக்க உள்ளார். குறிப்பாக, ‘மாநாடு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா இல்லையா என்பது கூட அந்த நேரத்தில் தான் முடிவாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், சிம்பு-வெங்கட் பிரபு படத்திற்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிம்பு தற்போது ஒப்பந்தமான படங்களில் முழு தீவிரத்துடன் ஈடுபட்டு வருகிறார். இதில், வெற்றிமாறன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது சரியாக நடைபெற்று வருகின்றன.
எனவே, சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி எப்போது உருவாகும் என்பது குறித்த முழுமையான தெளிவை பெற சில மாதங்கள் காத்திருக்க வேண்டியதுதான்.