அடி…அடி… ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெளுத்து கட்டிய இந்தியா
அமீரகம்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 210 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.
கடந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மிக மோசமாக சொதப்பியது. ஆனால் இந்த போட்டியில் இந்தியாவின் ஓப்பனிங் ஜோடி பொளந்து கட்டினர். ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடி காட்டியதால், பவர் ப்ளேவின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த இரு வீரர்களையும் ஆஃப்கானிஸ்தான் பவுலர்களால் அசைத்து கூட பார்க்க முடியவில்லை. இதனால் இந்திய அணி முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் குவித்தது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்ற பெருமையையும் ரோகித் – ராகுல் ஜோடி பெற்றனர்.
ஆட்டத்தின் 12வது ஓவருக்கு பின்னர் இந்திய அணியின் ஸ்கோர் சிறிது கட்டுப்படுத்தப்பட்டது. சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா கரீம் ஜனாத் பந்தில் அவுட்டானார். 47 பந்துகளை சந்தித்த அவர், 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 74 ரன்களை விளாசினார். அவர் அவுட்டான சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். 48 பந்துகளை சந்தித்த அவர், 69 ரன்களை விளாசினார்.
14 ஓவர்கள் ஆனதால் அதிரடி காட்டுவதற்காக முதல் விக்கெட்டிற்கு ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். 2வது விக்கெட்டிற்கு ஹர்திக் பாண்ட்யா களமிறக்கப்பட்டார். இவர்கள் இருவரும் கடைசி சில ஓவர்களில் பந்துகளை தெரிறக்க விட்டனர். ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 27 ரன்களும், பாண்ட்யா 13 பந்துகளில் 35 ரன்களும் குவிக்க 20 ஒவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 210 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.