சென்னை: தினந்தோறும் நிலக்கடலை சாப்பிடும் நபர்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான ஞாபக திறனும் உண்டாவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன. இத்தகைய பயன்கள் கொண்ட வேர்க்கடலையுடன் அவல் சேர்த்து உப்புமா செய்து சாப்பிட்டு பாருங்கள். அருமையான சுவை மட்டுமல்ல. உங்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
தேவையானவை
கெட்டி அவல் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு (வேகவைக்கவும்)
பச்சை மிளகாய் – 2
சீரகத்தூள் – 2 சிட்டிகை
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை 12 மணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும். அவலை நன்கு அலசி தண்ணீரை வடியவிடவும். பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் அவலைச் சேர்த்து மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு புரட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு வேகவைத்த வேர்க்கடலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும்.