சென்னை: மாலை வேளையில் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா. முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து ஒரு சாட் ஐட்டம் செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த முட்டை ஆலு சாட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டை – 4
உருளைக்கிழங்கு – 5
வெங்காயம் – 3 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகு – 1 டீஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை: முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கை கழுவி போட்டு தண்ணீர் ஊற்றி, 3-5 விசில் விட்டு இறக்கி, குளிர வைத்து, தோலை உரித்து, ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயம், முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை பிரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,
உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் முட்டையை வைத்து, அதனை இரண்டாக வெட்டி, அதில் உள்ள மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, அதில் இந்த உருளைக்கிழங்கு கலவையை போட்டு நிரப்பி, அதன் மேல் சாட் மசாலா மற்றும் கொத்தமல்லியை போட்டு அலங்கரிக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை ஆலு சாட் ரெடி!!!