அவருக்கு மாற்று இல்லை… ஜடேஜா பற்றி தோனி கூறிய பதில்

மும்பை: அவருக்கு மாற்று இல்லை… ரவீந்திர ஜடேஜா விவகாரம் குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி முதல் முறையாக வாய் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. ஜடேஜாவின் கேப்டன்சி மாற்றத்தால் அவர் அணியில் இருந்தே விலகப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டன்சி பதவியை தோனிக்கு கொடுத்த அடுத்த போட்டியிலேயே ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டார். காயம் என்ற காரணம் கூறப்பட்டது. பின்னர் ஐபிஎல் தொடரில் இருந்தே விலகுவதாக அறிவித்தார். இதனால் சிஎஸ்கேவுக்கும் – ஜடேஜாவுக்கும் கேப்டன்சி விவகாரத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது எனக்கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில், ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்வதை நிறுத்தியது சென்னை அணி. சுரேஷ் ரெய்னாவும் இதே போன்று தான் முதலில் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் அணியில் இருந்தே நீக்கப்பட்டார். எனவே சென்னை அணிக்கும் ஜடேஜாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அடுத்தாண்டு முதல் சிஎஸ்கே அணியில் ஜடேஜா அடுத்தாண்டு முதல் விளையாட மாட்டார் எனத்தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஜடேஜா விலகல் குறித்து கேப்டன் தோனி பேசியுள்ளார். மும்பை அணிக்கு எதிரான டாஸின் போது பேசிய அவர், ரவீந்திர ஜடேஜாவை போன்ற ஒருவர் இல்லாதது வருத்தமாக உள்ளது.
அவருக்கு மாற்று வீரரை தேடுவது கடினம். அவரை போன்று ஒருவரால் களத்தில் ஃபீல்டிங் செய்யவே முடியாது. எனக்கு தெரிந்து அவருக்கு மாற்றே இல்லை. நிறைய பிரச்சினைகள் வரும்போது, நாம் செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதுதான் சிறப்பான முடிவை கொடுக்கும்.