ராஜ்யசபா உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

சென்னை: வேட்புமனு தாக்கல் நிறைவு… தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக சார்பில் 3 பேர், அதிமுக சார்பில் இருவர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் மற்றும் 7 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவைச் சேர்ந்த பாரதி, இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். திமுக, தனக்கான 4 இடங்களில் 3 இடங்களுக்கு போட்டியிடுகிறது. ஏற்கெனவே சட்டப்பேரவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது.
இதேபோல் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் அக்கட்சி சார்பில் வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நேற்று ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான சி.வி.சண்முகம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 உறுப்பினர்களுக்கான இடங்களுக்கு திமுக 3, காங்.1, அதிமுக 2 பேர் என மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 13 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். திமுக, அதிமுக, காங்கிரஸை சேர்ந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த 7 பேருக்கு முன்மொழிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.