மங்காத்தா-2?…. அஜித்தை குடும்பத்தினருடன் சென்று சந்தித்த தயாநிதி அழகிரி

சென்னை: குடும்பத்தினருடன் சந்திப்பு… நடிகர் அஜித் குடும்பத்துடன், மு.க. அழகிரியின் மகனும், தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித்தின் 50-வது படமாக உருவாகி கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ஷேடில், அர்ஜுனுடன் சேர்ந்து மிக அருமையாக நடித்திருப்பார். பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் தயாரித்திருந்தது.
இந்நிலையில், நடிகர் அஜித், ஷாலினி மற்றும் அவர்களது மகள் அனௌஷ்காவுடன், தயாநிதி அழகிரி மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகியோரும் உள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி, ‘சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்னு, அவரை சுற்றி இருக்கும்பொழுது கிடைக்கும் எனர்ஜியை வார்த்தையால் விவரிக்கமுடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அவரது மனைவி அனுஷா தயாநிதி “சினிமா துறையில் இருக்கும் இந்த இரண்டு சிறந்த நடிகர்களின் ஆற்றலுக்கு ஈடாக, வேறு யார் ஒருவரும் இருக்க முடியாது. அவர்களது வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது! உண்மையில் ஒரு அல்டிமேட் மாலை” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ‘மங்காத்தா 2’ படத்திற்கு பேச்சு வார்த்தை எதுவும் எழுந்துள்ளதா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.