இணையத் தொடரை இயக்க உள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்

சென்னை: இயக்குநர் பா. இரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். சார்பட்டா பரம்பரைக்கு அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்கிற காதல் படமொன்றை இயக்கி வருகிறார். இதற்கடுத்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் பா. இரஞ்சித்.
வேட்டுவம் என்கிற படம் மற்றும் இணையத் தொடரை இயக்கவுள்ளார் பா. இரஞ்சித். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. நீலம் ஸ்டூடியோ மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளன. சிறையில் ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்களும் அந்த நபரின் பின்னணியும் வேட்டுவம் படத்தின் கதையாக இருக்கும் என அறியப்படுகிறது. இதன் முதல் பாகம் படமாகவும் இதர பாகங்கள் இணையத்தொடராகவும் வெளிவரவுள்ளன.
இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அடுத்த வருடம் வேட்டுவம் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.