காங்கிரஸ் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைப்பு

சென்னை : தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 4-ந்தேதிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
இதனையடுத்து, கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தல், இடங்கள் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இடப்பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்றனர்.
பேச்சுவார்த்தை முடிந்தபின் கே.எஸ். அழகிரி அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தோழர்கள் விருப்பப்பட்டு கேட்கும் இடங்களை தி.மு.க.விடம் கேட்டு பெறுவோம். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் மாவட்ட அளவில் 3 தினங்களில் வெளியிடப்படும். பல மாவட்டங்களில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.