பா.ம.க. கட்சியின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு

சென்னை : டாக்டர் ராமதாஸ் 1989-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். 1991-ம் ஆண்டு முதன் முதலாக பாட்டாளி மக்கள் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை முறித்து கொண்டு தனித்து போட்டியிட்டது.
இந்நிலையில், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே பா.ம.க. தயாராக தொடங்கி உள்ளது. அதுபோல 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதிலும் அந்த கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக உள்ளார். எனவே கட்சியில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தற்போது ஜி.கே.மணி இருந்து வருகிறார். தற்போது, ஜி.கே.மணிக்கு விடை கொடுத்து விட்டு பா.ம.க.வுக்கு புதிய தலைவர் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பா.ம.க.வில் இளைஞரணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ம.க.வின் புதிய தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 28-ந்தேதி நடக்கும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
பா.ம.க.வை பலப்படுத்தி ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்கும் வகையில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் பா.ம.க.வில் பல அதிரடி மாற்றங்கள் வரும் என்று கூறப்படுகிறது.