அசாமில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் கடந்த சில பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் பல கிராமங்கள் மூழ்கியுள்ளன.
தற்போது இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ரெயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.