ரஷ்யாவில் திரைப்படங்கள் வெளியிடுவதில்லை… ஹாலிவுட் நிறுவனங்கள் முடிவு

நியூயார்க்: ஹாலிவுட் நிறுவனங்கள் எடுத்த முடிவு… ரஷ்ய நாட்டில் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என டிஸ்னி, சோனி, வார்னர் உள்ளிட்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதேவேளை, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், அமைப்புகள் என பல்வேறு தரப்பும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என பல்வேறு ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், சோனி உள்ளிட்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவில் திரைப்படங்கள் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதன் மூலம் இன்னும் சில நாட்களில் உலக அளவில் வெளியாக உள்ள தி பேட்மென், டெர்னிங் ரெட், பொர்பியஸ் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் திரைப்படங்கள் ரஷ்யாவில் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.