உள்ளாட்சி தேர்தலில் நடந்த சுவாரசிய சம்பவங்கள்

சென்னை: ஒரே குடும்பத்தில் 3 பேர் வெற்றி… தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணவன், மனைவி வெற்றி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை,மகன், மகள் வெற்றி என பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சி 4-வது வார்டில் திமுக சார்பில் ஜோசப் என்பவரும் 10-வது வார்டில் திமுக சார்பில் அவரது மனைவி ரெஜினி ஸ்டெல்லாபாய் என்பவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஏரல் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வார்டு உறுப்பினராகத் தேர்வானார்கள். அமமுக சார்பில் 15வது வார்டில் போட்டியிட்ட ஏரல் ரமேஷூம், 1வது வார்டில் அவரது மகன் பாலகௌதமும், 2 வது வார்டிலும் மகள் மதுமிதாவும் வெற்றி பெற்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் 14வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் மருத்துவர் ராஜேஷ் வெற்றி பெற்ற அடுத்த நொடியே,வெற்றி சான்றுடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3வது வார்டில் மோகன்ராஜ், அரக்கோணம் நகராட்சி 35 ஆவது வார்டில் காந்திராஜ் மற்றும் மேல்விஷாரம் நகராட்சி 19வது வார்டில் சாபிராபீ ஆகியோர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் போட்டியிட்ட முகமது பர்வேஸ் வெற்றி பெற்றுள்ளார்.