ராஜஸ்தானில் 1 மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

உதய்பூர் :நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வருகிற தையல்காரர் கன்னையா டெலி என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2 பேர் கூர்மையான கத்திகளுடன் கன்னையா டெலி கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி, அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தினை தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர் சந்தைகள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. கொலையாளிகளை கைது செய்யக்கோரி உளளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர். இந்த படுகொலைக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உதய்பூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தானில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் ஒரு மாதத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.