November 28, 2022

“ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் கிடையாதா”?…பரபரப்பு தகவல்…

சென்னை  : கல்கியின் நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படம் வெளியான முதல் நாளிலேயே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. இதனிடையே ராஜராஜசோழன் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் கூறிய கருத்து விமர்சனத்துக்குள்ளானது.

சினிமாவை அரசியலாக்குவது முக்கியம் என்று கூறிய அவர், திருவள்ளுவருக்கு காவி அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது போன்ற சின்னங்கள் நம்மிடமிருந்து பறிக்கப்படுகின்றன என்றார். இந்நிலையில், சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் விக்ரமுடன் பார்த்த நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், வெற்றிமாறனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற பெயர் இல்லை. சைவம், வைணவம், சமணம் போன்ற மதங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்.

இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார் . இவை அனைத்தும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. இந்தப் படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கே நாம் வரலாற்றைப் புனையவில்லை, திரிக்கவில்லை, மொழி அரசியலைத் திணிக்கவில்லை. நல்ல கலைஞர்களைக் கொண்டாடுவோம்.”என்று தகவல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!