காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அவசர வழக்கு

பெங்களூரு: டெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்துக்கு அக்டோபர் 15-ம் தேதி வரை வினாடிக்கு 3000 கனஅடி காவிரி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவசர வழக்கு தொடரப்பட்டது. அதில், “கர்நாடகாவில் நிலவும் கடும் வறட்சியால் அணைகளில் போதிய தண்ணீர் இல்லை.
பெங்களூரு நகரம் மற்றும் மண்டியா மாவட்டத்தின் பாசனத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கர்நாடகா திணறி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு 3000 கன அடி காவிரி நீரை திறந்து விட முடியாது. எனவே, நிர்வாக ஆணையத்தின் உத்தரவை திருத்த வேண்டும்.
வறட்சி காலத்தில் தண்ணீர் விநியோகம் தொடர்பாக விதிமுறைகள் வகுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வு காண, மேகதாதுவில் அணை கட்ட கோரிய வழக்கை விசாரிக்க வேண்டும்.
அதேபோல், கர்நாடக அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய கர்நாடக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் இதேபோல் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.