சாது மிரண்டால் காடு கொள்ளாது என திமுகவுக்கு எச்சரிக்கை விடுகிறேன் – மயூரா ஜெயக்குமார்

மார்த்தாண்டம் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மார்த்தாண்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், செல்போன்களின் மூலம் பல்வேறு நன்மைகளை சுலபமாக பெற முடிகிறது. இதற்கான முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தான்.
பல்வேறு வகைகளில் நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற அவரை வெடிகுண்டு வைத்து சிதறடித்து விட்டனர் துரோகிகள். இந்த கொலை குற்றவாளிகளுக்கு அப்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது அதில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். அவரை நம் கூட்டணி கட்சியான தி.மு.க. தலைவர் வரவேற்று கட்டியணைப்பது நெஞ்சைப் பிளக்கும் செயலாக உள்ளது.
பேரறிவாளனை இன்று விடுதலை செய்த அதே உச்சநீதிமன்றம் தான் அன்று குற்றவாளி என கூறியது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குமரி மாவட்டத்தில் தான் அதிகம் படித்தவர்கள் உள்ளனர்.ஆகையால் இதனை கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என திமுகவுக்கு எச்சரிக்கை விடுகிறேன். கட்டியணைத்த தி.மு.க. கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.