வேப்ப மர பட்டை சாறில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு-சக்தி இருப்பதாக தகவல்

டெல்லி : கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின்ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களில், வேப்ப மரத்தின் பட்டை சாறு, மலேரியா, வயிறு மற்றும் குடல்புண்கள், தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி உள்ளது.
தற்போதைய ஆராய்ச்சி, வேப்ப மரப்பட்டையின் கூறுகள், பரவலான வைரஸ் புரதங்களை குறிவைக்கும் என தெரிய வந்துள்ளது. இது சார்ஸ் கோவ்-2 உட்பட வளர்ந்து வரும் கொரோனா வைரஸ்களின் மாறுபாடுகளுக்கு எதிராக வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படுகிற திறனைக் காட்டுகிறது.
வேப்ப மர பட்டை சாறினை விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், அதில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு- சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. வேப்ப மரப்பட்டை சாறு பல்வேறு இடங்களில் உள்ள கொரோனா வைரசின் பைக் புரதத்துடன் பிணைக்கப்பட்டு, வைரஸ் நுழைவை தடுக்கிறது.
ஆராய்ச்சியின் அடுத்த கட்டம், வேப்ப மர பட்டை சாற்றில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை கண்டறிவதாகும். இந்த கூறுகள், சார்ஸ் கோவ்-2 வின் பல்வேறு பகுதிகளுடன் பிணைக்கப்படுவதால் இது உருமாறிய கொரோனாவுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான புதிய வைரஸ் தடுப்பு சிகிச்சைகளுக்கு இந்த கண்டுபிடிப்புகள் வழிகாட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.