கவர்னர் மாளிகையை யாரும் கட்டுப்படுத்த வேண்டாம் – கேரள கவர்னர்

திருவனந்தபுரம் : கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் கேரளாவில் உள்ள பல்கலை கழக துணை வேந்தர் நியமனத்தில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் கவர்னருக்கு சமீபத்தில் தனி உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையானது.
கவர்னரின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கவர்னர் ஆரிப் முகமது கான் பேட்டி அளித்தபோது, கேரளாவில் உள்ள மந்திரிகளில் பலருக்கு 20-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊழியர்கள் மாற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என அரசின் பணம் வழங்கப்படுகிறது. இது அரசிற்கு நிதி சுமையை ஏற்படுத்துகிறது.
மாநில மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு மாநில அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். கவர்னர் மாளிகையை யாரும் கட்டுப்படுத்த வேண்டாம். அரசுக்கும் இதற்கு உரிமை இல்லை. நான் ஜனாதிபதிக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.