திருச்செந்தூர் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைக்க ஆய்வு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் வாகனப் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் நகரினை கடந்து செல்வதற்கு பெரிதும் சிரமமடைகின்றனர்.
இதனைத் தவிர்க்கும் விதமாக நகரின் எல்லையிலிருந்து கோயில் வரையில் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருச்செந்தூர் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான இடங்களை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செந்தூர் கோயில் அருகிலுள்ள பைரவர் கோயில் கடற்கரை பகுதியில் புறவழிச்சாலையின் வழித்தடங்கள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரைபடங்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்கள் சந்திரசேகரன், பாலமுருகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அமைச்சர் கன்னியாகுமரி சாலையில் தோப்பூர் பகுதியிலும் புறவழிச்சாலை நிறைவடையும் இடத்தினை பார்வையிட்டார்.