ஏடிஎம்மில் விட்டுச் சென்ற பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

புதுக்கோட்டை: உரியவரிடம் ஒப்படைப்பு… புதுக்கோட்டையில் ஏடிஎம் மையத்தில் கவனக்குறைவாக விட்டுச்சென்ற 23ஆயிரத்து 700 ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் தனது மகள் வங்கிக்கணக்கில் கடந்த 15ஆம் தேதி வடக்கு ராஜ வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி டெபாசிட் மெஷினில் 23ஆயிரத்து 700ரூபாயை செலுத்தி விட்டு சென்றுள்ளார்.
அதே ஏடிஎம் மையத்திற்கு சென்ற நகர காவல் நிலைய முதன்மை காவலர் உத்ராணி அந்த மெஷினில் ஏற்கனவே செலுத்தப்பட்ட பணம் ஏற்கப்படாமல் இருந்ததை கண்டு பிடித்துள்ளார். இதையடுத்து அந்தத் தொகையை எடுத்த அவர் வங்கி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்த பின்னர் பணத்தை நகர காவல் ஆய்வாளர் குருநாதரிடம் ஒப்படைத்துள்ளார்.
தொடர்ந்து பணம் செலுத்தி 2 நாட்களாகியும் வங்கிக் கணக்கிற்கு வராத நிலையில் அம்பாள்புரம் வங்கி கிளை அலுவலகத்தில் பழனிவேலு புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது வங்கி ஊழியர்கள் தாங்கள் டெபாசிட் மெசினில் போட்ட பணம் ஏற்கப்படவில்லை என்றும் அந்தப் பணம் காவல் நிலையத்தில் பத்திரமாக இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.