குடியரசு தின அலங்கார ஊர்தி இன்று கோவை வந்தது

கோவை : இந்த ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அனுமதி மறுக்கப்பட்ட 3 அலங்கார ஊர்திகளும் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்றன. இந்த அலங்கார ஊர்திகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
அலங்கார ஊர்திகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து கொடியசைத்து அலங்கார ஊர்திகளை தமிழகத்தின் பிற நகரங்களுக்கு அனுப்பி வைத்தனர். 3 அலங்கார ஊர்திகள் தனித்தனியாக கோவை, ஈரோடு, மதுரை ஆகிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அலங்கார ஊர்தி இன்று பிற்பகல் 2.05 மணிக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கு வந்தது- அங்கு அதிகாரிகள், பொதுமக்கள் திரண்டு நின்று அலங்கார ஊர்தியை வரவேற்றார். இதைத்தொடர்ந்து அலங்கார ஊர்தி கோவை வ.உ.சி. மைதானத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்படுகிறது. அலங்கார ஊர்தி இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை காட்சிப்படுத்தப்பட உள்ளது.