August 18, 2022

நிறைவடைந்த அக்னி நட்சத்திரம்… இருந்தாலும் வெயில் கொளுத்துமாம்!!!

சென்னை; அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தின் காலகட்டம் மே 4ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் இன்று (மே 28) விடைபெறுகிறது. இந்தாண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது.

அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதனால், அக்னி வெயிலின் உச்சம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்பட்டது. அதன்படி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே வெயில் வறுத்தெடுக்க தொடங்கியது. ஆனால், அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஒரு வாரத்திலேயே தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்தது.

அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் ஆகிய காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால், அக்னி நட்சத்திரத்தின் போது சுமார் 2 வார காலத்திற்கு மேலாக வெயில் தணிந்தே காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்தாண்டு அக்னி நட்சத்திரத்தின் போது அதிகபட்சமாக கடந்த 23ம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. அதேபோல் கடந்த 24ம் தேதி சென்னை, மீனம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைந்தாலும், மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!