உதய்பூர் கொலையாளிகள் பாகிஸ்தான் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள்

இஸ்லாமாபாத் : நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து, ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரர் ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். இதனால் அவர், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையை செய்த கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட தவாத்-இ-இஸ்லாமி என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரில், ஒருவர் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தாவத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்த நபர் என்பதும், மேலும் அந்த நபர் 2014ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் ராஜஸ்தான் திரும்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பு இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.