பழங்குடி இனத்தை சேர்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் ஓட்டு யாருக்கு?

புதுடில்லி: யாருக்கு ஓட்டு… தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு ஜூலை 1ல் பிரசாரத்தை துவங்க உள்ள நிலையில், பழங்குடி இனத்தை சேர்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கு ஓட்டளிக்க போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு, வேட்பு மனு தாக்கலுக்கு முன்னரே, கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்ட துவங்கினார். காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை தொலைபேசியில் அழைத்து ஆதரவு கோரினார்.இந்நிலையில், முர்மு வெற்றி பெறுவதில் சிக்கல் இருக்காது என்பது தெரிந்தாலும், பழங்குடியின எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., தங்கள் ஆதரவை யாருக்கு அளிப்பர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லோக்சபாவில், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு 47 இடங்கள் உள்ளன. இதில், 31 இடங்கள் பா.ஜ., கையில் உள்ளது. ஆனால் சட்டசபைகளில், பா.ஜ.,வுக்கு தேவையான ஆதரவு கிடைக்கும் அளவுக்கு பழங்குடியின எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை இல்லை. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அளிக்கும் ஓட்டு, தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன.
முர்மு கவர்னராக பதவி வகித்த ஜார்க்கண்டில், ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இந்த மாநிலத்தை சேர்ந்தவர். எனவே இங்கும் குழப்பமான சூழல் நிலவுகிறது.இதையடுத்து, ஜூலை 1ல் பிரசாரத்தை துவங்கும் திரவுபதி முர்மு, பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.