ரஷியாவின் பீரங்கி வாகனத்தை டிராக்டரில் இழுத்து திருடி சென்ற உக்ரைன் விவசாயி

கிவ் : உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த 6 நாட்களாக போர்தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். உக்ரைன் நகருக்குள் உள்ள ரஷிய ராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் உக்ரைனை சேர்ந்த விவசாயி ஒருவர் கிவ் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷியாவின் பீரங்கி வாகனத்தை தனது டிராக்டரில் கட்டி இணைத்து இழுத்து திருடி சென்றார்.அதன் பின்னால் ராணுவ வீரர் ஒருவர் ஓடி சென்றார். இந்த வீடியோவை இங்கிலாந்தின் பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி. ஜானி மெர்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை வெளியிட்ட ஜானி மெர்சர் கூறுகையில், இந்த வீடியோவின் மூலம் ரஷியா சிறந்த நிபுணத்துவம் பெற்ற நாடு இல்லை என்பது தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாக தெரியவில்லை. உக்ரைன் நாட்டு டிராக்டர், ரஷியாவின் பீரங்கி வாகனத்தை திருடி உள்ளது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.