அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியாவுக்கு பயணம்

தென்கொரியா : வடகொரியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும் அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது. இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.
இந்த பிரச்சினை குறித்து முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் எந்த பலனும் கிட்டவில்லை. இதனால் இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை முறிந்துபோனது. அமெரிக்காவில் டிரம்புக்கு பிறகு கடந்த ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் வடகொரியாவுடனான நின்றுபோன பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க தீவிர முனைப்பு காட்டினார். ஆனால் வடகொரியா அதை பொருட்படுத்தவில்லை.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை வடகொரியா 16 முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பிறகு ஜோ பைடன் இன்று முதல் முறையாக தென்கொரியாவுக்கு சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் புதிய அதிபர் யூன் சுக் இயோலை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஜோ பைடனின் இந்த வருகை அமெரிக்க-தென் கொரியா கூட்டணியை வலுப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.