பாரிஸ்: நூலிழையில் தவறிய பதக்கம்… பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில், இந்திய வீரர் அர்ஜூன் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நடந்து வருகிறது. 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 3வது நாளாக இன்று (ஜூலை 29) நடந்த ஆடவர் துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் 4வது இடம் பெற்று பதக்க வாய்ப்பை இழந்தார்.
10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் தோல்வி அடைந்தார். 8 வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 145.3 புள்ளிகளுடன் 7வது இடத்தை ரமிதா ஜிண்டால் பிடித்தார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவின் தகுதிச் சுற்றில் 3வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. மனு பாகர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஒலிம்பிக் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் போட்டியின் 2 வது லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் பெல்ஜியம் வீரர் ஜூலியன் கராக்கியை 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
சீனா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கத்தையும் வென்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஜப்பான் மற்றும் கொரியா 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கமும் வென்றுள்ளது. இந்தியா ஒரு வெண்கல பதக்கத்துடன் 22வது இடத்தில் நீடிக்கிறது.