இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த், தனது வாழ்க்கையில் மறக்க முடியாத பல சாதனைகளை படைத்தவர். 43 டெஸ்ட் போட்டிகளில் 2062 ரன்களும், 146 ஒருநாள் சர்வதேசங்களில் 4091 ரன்களும் அவரின் பெயரில் பதிவாகியுள்ளன. அதிரடியாக விளையாடி பந்துவீச்சாளர்களை திணறவைத்தவர், 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கான தேர்வுக்குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையிலும், யூடியூப் சேனல் வழியாகவும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

ஆனால் இவரின் உண்மையான சிறப்பு, அவர் வெளிப்படையான பேச்சிலும், மனிதநேயத்திலும் வெளிப்படுகிறது. அஸ்வின் போன்ற பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கையை மாற்றியவர் ஸ்ரீகாந்த். அதேபோன்று, தன் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்று, அவர்கள் வெளிநாடுகளில் சிறந்த நிலையை அடைய வழிவகுத்துள்ளார். நண்பர்களைப்போல் ஊழியர்களை நடத்தும் தன்மை, ஸ்ரீகாந்தின் தனித்துவம்.
இதோடு, சென்னையில் உள்ள தனது பெட்ரோல் பங்குகளில் பணிபுரிபவர்களுக்கும் உறுதியான ஆதரவாக இருக்கிறார். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, கூடுதல் நேர சம்பளம் என அனைத்தையும் வழங்குகிறார். அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகள், மருத்துவ செலவுகள், கல்விச்செலவுகள் என எதுவானாலும் தனது பொறுப்பாக ஏற்று நடத்தும் நல்ல மனசுக்காரர். ஊழியர்களும் பெருமிதத்துடன், “ஸ்ரீகாந்த் சார் எங்களை தன் குழந்தை போல பார்த்துக்கொள்கிறார்” என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு, கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், நல்ல உள்ளம் கொண்ட மனிதராகவும், சமூகத்தில் பலரின் வாழ்வை உயர்த்திய பெரும் நபராகவும் ஸ்ரீகாந்த் திகழ்கிறார். விளையாட்டு மைதானத்தில் சாகசம் காட்டியவர், மனிதநேயத்தில் மறக்க முடியாத அன்பை காட்டியுள்ளார். இதுவே அவரின் உண்மையான வெற்றி.