அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோவாகின் கவுண்டியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தோன்றிய ஒரு இந்திய வம்சாவளி கும்பல் மீது எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சோதனையின் போது, காலிஸ்தான் தீவிரவாதி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் அமெரிக்க இராஜாங்க பாதுகாப்புத் துறையை அதிரவைக்கும் வகையில் வெளியானது.

கைது செய்யப்பட்டவர்கள் தில்ப்ரீத் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், விஷால், பவிட்டர் சிங், குர்தாஜ் சிங், மன்ப்ரீத் ரந்தாவா மற்றும் சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஐந்து துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், 15 ஆயிரம் அமெரிக்க டாலர் ரொக்கம் மற்றும் சில உயர்தர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு குற்றச் செயல் அல்ல, அமைப்பாக இயங்கும் ஒரு சதிச் செயல் திட்டமென்பதற்கு உறுதி வழங்கும் வகையில் உள்ளதாக எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இக்கும்பல் அமெரிக்க மற்றும் இந்திய சட்டங்களை மீறி பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக சதித்திட்டம், சாட்சிகளை மிரட்டல் மற்றும் பயங்கரவாதக் நடவடிக்கைகள் ஆகியவற்றில் செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாகவும், பவிட்டர் சிங் என்பவர் தடைசெய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் இயக்கத்துடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
பவிட்டர் சிங் தொடர்பான தகவல்கள் இந்திய தேசிய புலனாய்வு முகாமை என்.ஐ.ஏ.வுக்கு முன்பே இருந்ததாகவும், அவரை நீண்ட காலமாக தேடி வந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது வெளிநாட்டு தேசங்களில் பதுங்கி பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிடும் குழுக்களின் நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.