ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கைலாசகிரி மலையில் ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்ட கண்ணாடி மேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. நாட்டிலேயே நீளமான இந்த கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 40 பேர் வரை நின்று கடல் மற்றும் மலைகளின் அழகிய காட்சிகளை ரசிக்க முடியும். சுற்றுலா வளர்ச்சிக்கு இது பெரும் ஆதரவாக இருக்கும் என மாநில அரசு நம்புகிறது.

இந்த பாலம் குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ‘எக்ஸ்’ தளத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். கைலாசகிரியில் கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி மேம்பாலம் உலகின் மிக உயரமானதாக விளம்பரப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், சீனாவின் ஜாங்ஜியாஜி பாலம் 300 மீட்டர் உயரத்திலும் 430 மீட்டர் நீளத்திலும் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டினார். விசாகப்பட்டினம் பாலம் 262 மீட்டர் உயரத்தில் அமைந்தாலும், அது பிரமிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
அவரது பதிவில், “உயரத்துக்கும் எனக்கும் சிக்கலான உறவு உள்ளது. எனவே, நேரில் சென்று பார்ப்பது என்னால் சாத்தியமில்லை. தற்போது வீடியோக்கள் மூலமாகவே காட்சிகளை அனுபவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுற்றுலா தளங்களின் வளர்ச்சி, தொழிலதிபர்களின் பார்வைகள் மற்றும் உலகளாவிய ஒப்பீடுகள் என பல்வேறு விவாதங்களை தூண்டியுள்ளது.