அடையாளம் தெரியாத நபர்களால் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான பாபா சித்திக், மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவர். இவர் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் பாபா சித்திக் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். குறிப்பாக, சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுவதால் அவரது இல்லத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான இருவரும் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் தற்போது சிறையில் இருக்கும் பஞ்சாபின் பிரபல கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், மூன்றாவது குற்றவாளியைக் கண்டுபிடித்த போலீஸார், அவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பாபா சித்திக் கொலையில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய்க்கு எப்படி தொடர்பு என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக குர்லா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த குற்றவாளிகளுக்கு தலா ரூ.50,000 கொடுக்கப்பட்டது, இது நன்கு திட்டமிடப்பட்ட கொலை என்று போலீசார் தெரிவித்தனர்.
சல்மான் கானின் வீட்டிற்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பில் இருந்து சல்மான் கானுக்கு ஏற்கனவே மிரட்டல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு, அவரை குறிவைக்கும் முயற்சியில் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
பாபா சித்திக் கொலை சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநில அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அவரது உடல் பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8.30 மணிக்கு மும்பை பிரிவில் உள்ள படா கப்ரஸ்தானில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன். இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு சிவில் சமூகத்தில் இடமில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.