கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர கர்நாடகத்தில் ரெட் அலர்ட் விடுக்கும் அளவுக்கு வானிலை மாறியுள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உத்தர கன்னடாவில் உள்ள கேஸில் ராக் பகுதியில் 17 செ.மீ., ஹொனாவர் அப்சர்வேட்டரியில் 16 செ.மீ., உடுப்பியில் 15 செ.மீ., அங்கோலாவில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஜூலை 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேசான மழை பகுதிகள்
வட உள் கர்நாடகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக இன்று (ஜூலை 7) லேசானது முதல் பரவலாக மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ. பல்லாரி, பெங்களூரு கிராமம், பெங்களூரு நகர்ப்புறம், சாம்ராஜ்நகர், சிக்கபல்லாபுரா, சித்ரதுர்கா, தவணகரே, குடகு, கோலார், மாண்டியா, மைசூரு, ராமநகரா, துமகுரு மற்றும் விஜயநகரா ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் பரவலாக மழை பெய்யும்.