புதுடில்லி: ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி மறுதேர்வுக்காக மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜூன் 21-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5.15 மணி வரை மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நாடு முழுவதும் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.