பெங்களூரு: மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விஜயபுரா பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து எத்னால் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அன்ஜாரியாவுக்கு எழுதியுள்ள கடிதம்:
மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தின் ‘முடா’ ஊழலில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பலன் அடைந்துள்ளார். இதுகுறித்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடக உயர்நீதிமன்றம் வந்து தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதியான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெற உயர் நீதிமன்றம் விசாரணை மேற்பார்வையை ஏற்க வேண்டும். உங்கள் வழிகாட்டுதலின் கீழ் நீதியின் கரம் மலரும். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மைசூர் விஜயநகரில், மூன்று மற்றும் நான்காம் கட்டங்களில், 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 50க்கு 80 அடி கொண்ட 5 மனைகளும், விஜயநகர் மூன்றாம் கட்டத்தில் 60க்கு 40 அடி கொண்ட ஒரு மனையும் உட்பட 14 மனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டன. சித்தராமையா அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர் மூடா தொடர்பான அனைத்து கோப்புகளையும் பெங்களூருக்கு எடுத்துச் சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஊழலை மறைக்கும் முயற்சி. இதை விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்