பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, ஷிமோகா, மண்டியா ஆகிய இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 36 ஆயிரத்து 672 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 114.50 அடியாக உயர்ந்துள்ளது. ஹேமாவதி அணைக்கு 16 ஆயிரத்து 250 கன அடி நீரும், ஹாரங்கி அணைக்கு 15 ஆயிரம் கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
கபிலா ஆறு உற்பத்தியாகும் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணிக்கு வினாடிக்கு 53 ஆயிரத்து 750 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 19.52 டிஎம்சி முழு கொள்ளளவைக் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 19.45 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பை கருதி வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.